திங்கள், 2 மார்ச், 2009

நாலு வார்த்தை பேசவிடு எழுதவிடு சேரனின் கட்டுரை பற்றி ……வசிட்டர்.

நாலு வார்த்தை பேசவிடு எழுதவிடு சேரனின் கட்டுரை பற்றி ……வசிட்டர்.

சேரன் குறிப்பிட்ட பத்திரியாளர்கள் பத்திரிகைகள் பற்றிய விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் ஏன் இவ்வளவு பிந்தி இந்த எண்ணம் வந்தது சேரனுக்கு. சின்னபாலா கொல்லப்பட்டபோது சொல்லமுடியாமல்போன வார்த்தைகள் பலருக்கு ஏன் இப்போது வருகின்றது?
இரட்டை நிலைப்பாடு பலரை பல இடங்களில் காப்பாற்றி இருக்கிறது. அது இல்லாத பலர் கொல்லப்பட்டார்கள். கொலையைக் கண்டு பயந்து புதியவர்கள் உருவாகாமல் இருக்கவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுதான் நியதியும் கூட.
சேரனின் பின்வரும் பகுதியில் எனக்கு நிறைய உடன்பாடு உள்ளது.

“இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சுதந்திரமாகப் போய்வர எத்தகைய தடைகளும் இல்லாத காலத்திலும்கூட ஊடகவியலாளர்கள் பலர் இப்பகுதிகளுக்குச் செல்வதில்லை. கொழும்பின் சொகுசான குடியிருப்புகளில் வாழ்ந்தபடி இராணுவத்தின் குரல் தரவல்ல அதிகாரிகள் சொல்வதை அப்படியே திருப்பி எழுதி அனுப்பிவிடுவதே வழமையாக இருந்து வருகிறது. வாய்பாடுபோல ‘இப்படி இராணுவம் சொல்கிறது’ என்ற ஒரு வரியைச் சேர்த்துவிடுவது மட்டும் ஊடக அறத்தை நியாயப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது”.

ஆனால் இயக்கத்தினால் மேற்கொள்ளப் பட்ட கொலைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டாமை பற்றியோ குறைந்தபட்சம் ஒரு பத்திரிகையாளன் என்ற வகையிலே ஒரு கண்டன அறிக்கை கூட எழுதமுடியாத அல்லது எழுத விரும்பாத பத்திரிகையாளர்கள் பற்றி பெரிதாக குறிப்பிட விரும்பாமல் சேரன் விலகி சென்றிருப்பது சாதாரண பத்திரிகையாளர்கள் போல் தேசியத்தின்பால் கொண்ட பற்றுதல் காரணமாக என்று கொள்ளலாமா?
இன்றைய வன்னியின் அவலநிலை பற்றி நமக்கு இருக்கின்ற வேதனையும் துயரமும் நியாயமானதுதான் அதனால்தான் சகல பத்திரிகையாளர்களும் குரல் கொடுக்கின்றார்கள். ஒரு மாபெரும் மனித அவலத்தைப் பார்த்து வாழாதிருக்காது செயல்படுகின்றது உலகத்தழிழ் எழுத்துலகம். “மக்களின் வாழ்நிலங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுவது ஒரு வரலாற்று தவறு” இதை வார்தைப்பிசகின்றி அனைத்து பத்திரிகையாளர்களும் முன்வைக்கின்றார்கள். அது வரவேற்கப்பட வேண்டியதுதான்.ஆனால் அன்று வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது இந்த வரலாற்றுத் தவறு எத்தனை பத்திரியாளர்களின் பேனாவால் எழுதப்பட்டது. இன்றும் அந்த மக்கள் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்களே இந்த உதாரணங்கள் ஏன் சேரனின் கட்டுரைக்குள் எடுத்தாளப்படாமல் போய்விட்டது சொல்ல வார்த்தைகள் இல்லையா?

சில ஊடக அமைப்புக்களின் பட்டியலைத் தந்து ஊடக சுதந்திரத்திற்கான துணிச்சலான போராட்டங்களை செய்து உலகளாவிய ஆதரவைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.உண்மைதான் அவர்களின் போராட்டம் பாராட்டுக்குரியதுதான். ஆனால் அந்தப்போராட்டம் அரசாங்கத்தின் மீறல்களை மட்டும் தான் கண்டுகொள்ளுமா? இயக்கங்களால் நசுக்கப்படும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக எவ்வளவு தூரம் நடாத்தப்பட்டுள்ளது? இங்கே தேசியம் என்ற திரை பேசவிடாமல் செய்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஊடகவியலாளர்களைப் பற்றி கூறவந்த சேரன் ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் இருக்கின்ற கருத்துச் சுதந்திரம் பற்றியும் பேசியிருக்கவேண்டும். அந்தக்கருத்துச் சுதந்திரத்தின் மறுதலிப்புத்தான் “இனம் தெரியாதவர்களால் சுடப்பட்டார்” என்ற பத்திரிகையாளர்களின் வாக்கியம். இதுவும் பத்திரிகையாளர்களின் இரட்டை நிலைப்பாடா?
கட்டுரையின் முடிவில் சேரனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்தான் இனி எமக்கு தேவையானது. காலம் கடந்தாவது அந்த நடைமுறைக்குள் நாம் எல்லோரும் வரவேண்டும். இது பத்திரிகைளாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பொருந்த வேண்டும். ஆயுதங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிரான ஒரே குரலாக இருக்கவேண்டும்.

சேரனின் கட்டுரையின் இறுதிப்பகுதி.
‘ஊடகவியலாளர்கள் என்ற முறையில் எத்தரப்பைச் சார்ந்த ஊடகவியலாளர்களும் கொல்லப்படுகிறபோது அல்லது காணாமல்போகிறபோது அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு எல்லா ஊடகவியலாளர்களுக்கும் இருக்க வேண்டும். இது இலட்சியம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அரசியல் கடப்பாடும் ஆகும்.
இலங்கைச் சூழலில் இப்போது இவற்றை எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக