சனி, 11 ஜூலை, 2009

வன்முறையின்றி தேர்தல் ஏதுக்கடி குதம்பாய்!

- சதாசிவம். ஜீ.
‘ஆடு நனையுதென்று ஓணான் அழுதுதாம்’ என்ற கதையாக வவுனியாவில் தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் மக்களைப் பார்த்து பொறுக்க முடியாமல் பலரும் பலவிதமாக கண்ணீர் வடிக்கின்றனர். இதில் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வடித்த கண்ணீரை நாம் ஓணான் அழுததோடு ஒப்பிடமுடியாவிட்டாலும், ஓணான்களுடன் அவருக்கு நல்ல உறவிருக்கிறது. அந்த உறவால்தான் அவருக்கு பாராளுமன்ற கதிரை கிடைத்தது என்பதை யாழ் மக்கள் நன்கு அறிவர். அதுவும் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர்! முதலாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் குதிரை கஜேந்திரன்! இவர்களுக்கும் சனங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பது தெரியாவிட்டாலும், இவர்களிருவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை யாழ். மக்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கின்றனர். பாவம் சிதம்பரநாதன் ‘அப்ப (90களில் யாழ்ப்பாணத்தை புலிகள், தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லை. மற்றும் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது) புலிகளுக்காக விளக்குப் பிடித்து நாடகம் போட்ட பாவமோ என்னவோ!’வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் சொற்களில் வடித்துவிடக்கூடியதல்ல. காலைக் கடனை செலுத்துவதற்கு(கழிப்பதற்கு) நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். அதனாலேயே வயிற்று வலி மற்றும் வியாதிகள் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. இவர்களின் நிலைமைகள் தொடர்பாக பலரும் தமது பார்வையை முன்வைத்திருக்கிறார்கள்.அடைமழை. சாவீடு. காவோலை கொண்டோடுறவனை வழிமறித்து ஐயர் குருதட்சனை கேட்ட கொடுமைகள் அங்கே நடந்தவண்ணமே இருக்கின்றன. அந்த மக்களுக்கென வழங்கப்படுபவை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் சுவறிச் செல்லம் துர்பாக்கியம். சத்தம் சந்தடியில்லாமல் சில நல்லவையும் நடந்துவருகின்றன. புலன் பெயர்ந்துள்ள புலமையுள்ளவர்கள் சிலர் நாடு திரும்பி, தடுப்பு முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகிறார்கள். இதில் குறிப்பிட்டக்கூடியது காயப்பட்டவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
மாநகரசபைத் தேர்தல்.
தேர்தல் இன்றி வன்முறை நடைபெறும். ஆனால் வன்முறையின்றி தேர்தல் நடைபெறுமா? இல்லை. தேர்தல் என்றால் வன்முறையும் சேர்ந்ததுதான் என்பது உலகளாவிய ரீதியில் நிரூபிக்கப்பட்டுவருகிறது. இது இலங்கைக்கோ இந்தியாவுக்கோ மட்டும் பொருத்தமானதல்ல.யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் மங்களகரமாக தேர்தல் வன்முறைகள் ஆரம்பித்துள்ளன. வன்முறையால் அடாவடித்தனங்களால் எதையும் சாதிக்கலாம் என்றிருந்தவர் முள்ளிவாய்க்காலில் தலை கிள்ளி எறியப்பட்ட பாடத்தை இன்றும் கற்றுக்கொள்ள மறுப்பது அறிவீனம். வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுவித்துக்கொண்டு ஜனநாயக ரீதியில் மக்களை அணுகுவதுதான் அவர்களுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது.ஊரில் சில்லறைத்தனமான திருட்டுக்கள் நடைபெற்றால் ‘இன்னார்தான் எடுத்தது’ என்பதை சனங்கள் நன்கு அறிவர். இவ்வளவு காலமும் புலிகளின் தலையில் பச்சடி அரைக்கலாம் என்று பலதரப்பட்டவர்களும் தடியைக் கையிலெடுத்து தண்டல்காரன் ஆனார்கள். இப்போ புலிகளின் கொட்டம் (i) இல்லை. எனவே சனங்களுக்கு விடையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஸ்டமனதல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வது நல்லது. யூ.என்.பியின் ஆட்சிக்காலத்தில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. அதளை மீள்நிர்மாணம் செய்வதற்கு சகலவழிகளிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ‘வீட்டுக்கொரு செங்கல்’ என்ற திட்டத்தில் செங்கற்களை கிராமம் கிராமமாக சேகரித்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தது. தென்பகுதி மக்களின் பங்களிப்பு அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.முன்னாள் மேயர் செல்லன் கந்தையாவின் தலைமையில் நூலகம் திறக்கப்பட சகல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நூலகம் திறக்கப்படவில்லை. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் திறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியபோது, செல்லன் கந்தையா மற்றும் தங்க. முகுந்தனை மூடிய அறைக்குள் அழைத்த அன்றைய புலிகளின் யாழ். மாவட்டப்பொறுப்பாளர் இளம்பருதி (பாப்பா, ஆஞ்சநேயர்) யாழ்ப்பாணத்தில் ‘ரத்த ஆறு ஓடும்’ என்று எச்சரித்து திறக்கவிடாமல் செய்தார். (இன்று இளம்பருதி இராணுவத்தின் கவனப்பில் நலமாகவேயுள்ளார்!)இந்த செய்தியினை அன்றைய யாழ். பத்திரிகைகள் உட்பட அனைத்து தமிழ் பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்தன. தமிழ் பத்திரிகைகள் புலிகளுக்கு பயந்துதான் அவ்வாறு நடந்துகொண்டன என்பதெல்லாம் சுத்த பம்மாத்து. ஏனெனில் புலிகளின் விருப்பு எது? என அறிந்து அதன்படி நடந்துகொள்வதை பயந்துதான் என்று சொல்லுவது அறியாமை. செல்லன் கந்தையாவின் தலைமையில் அது திறக்கப்படக்கூடாது என்பதில் யாழ் சைவ வேளாளர் குடி மட்டும்தான் மிகுந்த கவனம் செலுத்தியது என்றில்லை. மேற்படி பத்திரிகைகளும்தான்.கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக ஏறக்குறைய நாற்பதாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் புலிகளால் குறைந்தபட்சம் ஒரு நூகத்தைகூட திறக்க முடியவில்லை. பேரூந்து நிழல் குடையினைக்கூட திறக்க முடியாத வக்கற்றிருந்தார்கள். புலி உறுப்பினர்களின் பெயர்களில் இருக்கும் நிழல் குடைகள் புலி உறுப்பினர்களின் உறவுகளால் நிர்மாணிக்கப்பட்டது. புலிகளுடனான இறுதி சமாதானக் காலத்தில்தான் மேற்படி அடாவடித்தனங்கள் அரங்கேறின. நூலகம் திறப்பதில் முன்னின்று உழைத்த யாழ். மாநகர உறுப்பினர் தோழர் சுபத்திரன் (றோபேட்) இதே சமாதான காலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். புலிகளுக்கு நல்லவையும் பிடிக்காது, நல்லவர்களையும் பிடிக்காது. இவர்கள் மக்களுக்கு நல்லவை நடக்காதபடி பார்த்துக்கொண்டார்கள். நல்லவர்களை உயிரோடு விட்டுவிடாமலும் பார்த்துக்கொண்டார்கள்.இந்த மனிகுலத்துக்குப் புறம்பான கேவலம்கெட்ட நடைமுறைகள் புலிகளுடன் விட்டொழியட்டும். மனிதகுல வரலாற்றில் நாமும் மூத்தகுடி என்று மார்பு தட்டுவதற்கான தகுதிகளை இனியாவது நாம் வளர்த்துக்கொள்வோம். மக்களை ஜனநாயக ரீதியில் சிந்திக்கவும் செயற்படவும் அதிகாரத்தை கையிலெடுத்தவர்கள் அனுமதிப்பது மட்டுமல்ல தூண்டவும் வேண்டும். உண்மையில் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களை அறிவியல், கலாசார ரீதியில் முன்னேற்றவும், அவர்களை பாதுகாக்கவும்தான். அவர்களை அடக்கி ஆழ்வதற்காக அல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது சுகபோகத்தை மேம்படுத்துவதோ அல்லது கட்சியை - இயக்கத்தை வளப்படுத்துவதற்காகவோ அல்ல.

ஸ்ரீகாந்தா சொல்வதை நம்பலாமா?

அண்மையில் ஸ்ரீகாந்தா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மக்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன்சேர்ந்து ஒரு இணக்கப்பாட்டுடன் வேலை செய்யவேண்டும் என்றும். அதுதான் இப்போது செய்யக்கூடிய ஒரே வளியென்றும் கூறியிருந்தார். இது தன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக சொல்லப்பட்டுள்ளதா அல்லது உண்மையிலேயே மக்களுக்காக சில தந்திரோபாயங்களை பாவித்து மக்களை மீளக் குடியேற்றலில் உதவப்போகின்றாரா? இவர் கூறியதை நம்பலாமா?

வியாழன், 19 மார்ச், 2009

மன்னார் வைத்திய சாலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர் :

மன்னார் வைத்திய சாலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர் :
மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் இருவர் காணாமல் போயிருப்பதால் வைத்தியசாலையின் பாதுகாப்புக்கள் மேலும் பலப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. மன்னார் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டுமாத ஆண் குழந்தையும் நேற்று இரவு (18.03.2009) முதல் காணாமல் போயிருக்கின்றனர். வன்னிப்பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலமாக திருகோணமலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு பின் அங்கிருந்து இம்மாதம் 16ஆம் திகதி மன்னார் வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர்களில் நகுலேஸ்வரன் கிருசாந்தினி மற்றும் நகுலேஸ்வரன் சஞ்ஜீவன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார்கள். மேற்படி இருவர் காணாமல் போயிருக்கும் நிலையில் இன்று இராணுவ உயர் அதிகாரிகள் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையின் சுற்றுப்புற மதில்கள் முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டு வருவதாகவும் தெரிகின்றது. இது இவ்வாறிருக்க கடந்த மாத இறுதிப்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலை விடுதியில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் காவற்துறையினரினால் வைத்தியசாலைச் சூழலில் பாதுகாப்புக்கள் கருதி விசேட நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சிறுமி கொலையில் சந்தேக நபர் ரீ எம் வீ பியைச் சேர்ந்தவர் - போலீஸ்


திருகோணமலை சிறுமி கொலையில் சந்தேக நபர் ரீ எம் வீ பியைச் சேர்ந்தவர் - போலீஸ்
பி.பி.சி செய்தி
திருகோணமலை சென் மேரிஸ் பெண்கள் கல்லூரியிலிருந்து கடந்த 11ம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட நிலையில் 13ம் திகதி வெள்ளியன்று நகரின் மையப்பகுதியில் உள்ள வடிகான் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு வயதச் சிறுமியான ஜூட் றெஜி வர்சா கொலைச் சம்பவம் தொடர்பாக கைதான நபர்களில் ஒருவரான ஜனார்த்தனன் ரீ எம் வீ பீ யின் உள்ளுர் தலைவர்களில் ஒருவர் என திருகோணமலை பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒஸ்வின் மேர்வின் றினவன்ஸன் மற்றொரு சந்தேக நபரான கரன் ஆகியோரும் ரீ எம் வீ பீ உறுப்பனாகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஒரு சந்தேக நபர் றெஜினொல்ட் என்பவர் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. பிரதான சந்தேக நபரான றினவுன்ஸன் கடந்த 15ம் திகதி ஞாயிறன்று பொலிசாரால் விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்ட வேளை தப்பியோட முனைந்தபோது போலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். உள்ளுர் தலைவரான ஜனாhத்தனன் ரீ எம் வீ பீ யின் உவர்மலை பிரிவு பொறுப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ரீ எம் வீ பீயின் தலைவர் கைலேஸ்வரராஜா சந்தேக நபாகள் ரீ எம் வீ பீ யின் உறுப்பினர்கள் அல்ல என மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.இதே வேளை இந்த சிறுமியின் கொடுர கொலைச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நகரின் சில இடங்களில் இன்று கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
_____________________________________________________________________________

வியாழன், 12 மார்ச், 2009

புதுமாத்தளனில் தற்காலிகக் குடில்கள் புயல் காற்றால் பெரும் சேதம்


புதுமாத்தளனில் தற்காலிகக் குடில்கள் புயல் காற்றால் பெரும் சேதம் : இடம்பெயர்ந்த மக்கள் பாதிப்பு என டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு
முல்லைத்தீவில் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50இ000க்கும் அதிகமான இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்து வந்த மக்களில் அநேகமானோர் புதுமாத்தளன் பகுதியில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்காலிக குடில்களும் புயல் காற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 9இ 10ஆம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை இடம்பெயர்ந்து புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவர்கள் போதிய உணவுஇ மருந்துஇ சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50இ000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன்இ தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தமது அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

புதன், 11 மார்ச், 2009

மாத்தறையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி அங்குரார்ப்பண வைபவத்தில் தற்கொலைத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மாத்தறையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி அங்குரார்ப்பண வைபவத்தில் தற்கொலைத் தாக்குதல்மத வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது புலிகள் நடத்திய மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட இந்தச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தற்கொலைத் தாக்குதல் மூலம் இப்படியான செயல்பாட்டை இலங்கையில் புலிகளைத்தவிர இதுவரை வேறு எவரும் செய்தது கிடையாது. எனவே இது புலிகளால் செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகும். சிலர் வாதிடுவதுபோல் அரசாங்கம் செய்து விட்டு புலிகள் மேல் குற்றம் சுமத்தலாம் என்ற வாதத்திற்கே இங்கு இடமில்லை. புலிகள் அநாகரிகமான செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இதே வேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுக்கொண்டும் காயப்படுத்தப் பட்டுக்கொண்டும் இருக்கின்றார்கள். அரசாங்கம் அதை மறுத்துக்கொண்டிருக்கிறது. அந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதோடு பொதுமக்கள் பாதிக்கப்படுவதில் தேவையான கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். புலிகள் மக்களோடு நிற்கின்றார்கள், அங்கு நின்று தர்க்குகின்றார்கள் அதனால்தான் அரசாங்கம் அப்படிச் செய்கின்றது என்ற சிலரின் வாதத்தை எவராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது அது மனிதாபிமானம் கொண்ட செயலும் அல்ல. அரசு உடனடியாக இந்தக்காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

கப்பல் திரும்பியது ஏன்? புதிய தகவல் செய்தியை தொடர்ந்து உள்ளது.

உணவுக்கப்பல் தாக்குதலுக்குள்ளாகவில்லை ‐ திருகோணமலையை நோக்கி சென்றுள்ளது – முல்லை அரச அதிபர் :

நான் இந்த கடல் பகுதியில் தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான் காணவில்லை. அந்த உணவுக் கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம் என்று புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்பரப்புக்கு வந்த உணவுக் கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை குறித்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
500 மெற்றிக் தொன் உணவுடன் வந்த கப்பல் அதிலிருந்து 140 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இறக்கிவிட்டு மீதி உணவுப் பொருட்களை இறக்குவதற்கு மேலும் இரண்டு நாட்கள் தேவைப்பட்ட நிலையில் கடும் காற்றுஇ மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உணவுப் பொருட்களை இறக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக தாங்கள் அறிவதாகவும் அங்கிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் அப்படித்தான் கூறினர் என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல் அங்கு வருகின்ற உணவுப் பொருட்களை தாங்கள்தான் பொதுமக்களுக்குப் பிரித்து வழங்குவதாகவும் வழங்குகின்ற பொறுப்பையும் தாங்களே ஏற்றுக் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலே உள்ள செய்திபற்றி அங்குள்ள சிலருடன் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கப்பல் தரித்து நின்ற இடத்திற்கு அண்மையாக சண்டை நடைபெற்றதும் குண்டுகள் விழுவதும் உண்மையெனவும். ஆனால் கப்பலை நோக்கி குண்டு வீசப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதேநேரம் கடல் கொந்தளிப்பாக இருந்ததும், பொருட்களை இறக்குவதில் சிரமம் இருந்ததும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. அப்படியாக இருந்தால் ஏன் அரசாங்கம் பொய்யான காரணம் கூறியது என்பது கேள்வியாக உள்ளது. இப்படியான பிரச்சாரம் அரசாங்கத்தின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கைக்கு குந்தகமானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.