வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறது வீசுதென்றல் ஆசிரியர் குழு.


வசிட்டர்
வித்தியாதரன் இலங்கையின் தமிழ் ஊடகங்களின் மிகப்பிரபலமான ஊடகவியலாளர். இவரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தற்போது கூறினாலும் உண்மையில் அவரை மகிந்த மலர்ச்சாலையில் இருந்து கொண்டுசென்ற விதம் பற்றி பார்த்தவர்கள் கூறுவதைப்பார்க்கும்போது அது ஒரு கடத்தல் போன்றே தோன்றுகின்றது. உதயன் பத்திரிகை அதிபர் எடுத்த உடனடி நடவடிக்கைகளால் வித்தியாதரனின் கடத்தல் கைதாக மாற்றம் பெற்றுள்ளதென நம்புவதற்கு ஏதுவாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இதை வீசுதென்றல் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேலாவது இலங்கை அரசோ காவற் துறையினரோ இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாது செயல்படுவது மக்களுக்கு அரசின்மேல் மதிப்பை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வித்தியாதரன் அவர்கள் ஒரு ஊடகத்தின் பிரதம ஆசிரியராக இருந்துகொண்டு செயல்பட்ட விதம் சரியானதா என்ற கேள்வியை முன்வைத்தால் இல்லை என்பதே விடையாகும். பத்திரிகை ஆசிரியனுக்கு ஒரு தர்மம் இருக்க வேண்டும். தவறுகள் நடக்கும்போது தட்டிக்கேட்க வேண்டும், நியாயத்தின் பக்கம் குரலை உயர்த்தவேண்டும். ஒரு பக்கச்சார்பான வாதங்களை வைப்பதும் அதை பிழை என்று தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக சரிஎன்று எழுதுவதும் ஊடகவிலாளர்களுக்கு இருக்கக்கூடாது. எந்தக் கொலையையோ கடத்தலையோ ஒரு பத்திரிகையாளன் மறைக்க முற்படுவதோ அல்லது நியாயப் படுத்துவதோ சரியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லை அது ஒரு முக்கியமான தேவைக்காகத்தான் செய்யப்பட்டது என்று பத்திரிகையாளன் சொல்பவனாக இருந்தால் அவன் பத்திரிகைத் தொழிலை விட்டுவிட்டு பாத்திரம் கழுவும் தொழிலைச் செய்யலாம் அது கௌரவமாகவும் இருக்கும் ஆபத்து இல்தாததாகவும் இருக்கும்.
அரசாங்கம் புலிகளிடம் இருந்து கற்றுக்கொண்டவை எல்வாவற்றையும் இப்போது நடைமுறைப்படுத்துகின்றது இந்த ஊடகவியலாளர்கள் கடத்தல் கொலை என்பனவும் புலிகளிடம் இருந்து கற்றுக்கொண்டவைதான். இதன்மூலம் குறுகிய பாதையில் பிரச்சினையை தீர்த்துவிடலாம் போல் தோன்றும் ஆனால் தொலைநோக்கில் பார்தால் அது அழிவில்தான் முடியும் இதற்கு புலிகளே நல்ல உதாரணம்.
பத்திரிகைகள் தவறான செய்தியை வேண்டுமென்றே போடும் போது அரசாங்கத்திற்கு கோபம் உண்டாவது தவிர்க்க முடியாததுதான். அதற்காக தவறான முறைகளை கையாள்வது தவறாகும். வித்தியாதரனுடைய விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க விரும்பியிருந்தால் அவரை முறையாக கைது செய்திருக்க வேண்டும். அவர்கள் சார்ந்திருப்பது பதிவுசெய்யப்பட்ட ஊடகங்கள், பதிவே இல்லாத இணையத்தளமல்ல ஆகவே நீதிமன்றம் கொண்டு சென்று பொய்யான தகவல்கள் பிரசுரித்தமை, மக்களை தவறாக வழிநடத்தியமை.. என்ற குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையில் அடைக்கப்படல் வேண்டும். அதைக்கூட நீதித்துறையிடம் விட்டுவிடவேண்டும். அரசியல் தலைவர்கள் மூக்கை நுளைக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்கு சட்டத்தில் இடமில்லாதிருந்தால் சட்டத்தை திருத்த வேண்டும். இப்படிச் செய்தால் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறிய அவப்பெயர் அரசாங்கத்திற்கு ஏற்படாது அத்தோடு பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிக்காத பத்திரிகையாளர்களையும் நல்வளிப்படுத்த முடியும். அரசு இதை மேற்கொள்ளுமா? பத்திரிகையாளர்கள் சரியானவற்றுக்கு குரல் கொடுப்பீர்களா? எங்கள் இளம் சந்ததியினருக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக் கொடுப்பீர்களா? கொலை வெறிபிடித்து அலையும் காட்டுமிராண்டி தனத்தை ஒதுக்குவோம். நல்ல பத்திரிகையாளர்களாக மாறுவோம். நாம் எம்மைத்திருத்தினால் உலகம் தானாக திருந்தும் என்பதை நம்புவோம் ஏனென்றால் நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் உலகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக