திங்கள், 9 பிப்ரவரி, 2009

வன்னியில் வாழ்ந்த ஓர் தாயின் திடுக்கிடும் தகவல்.

வெளிநாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞன், புலிகளின் சமாதான காலத்தில் வன்னி மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க என்று பல இளைஞர்கள் யுவதிகள் சென்றபோது இவனும் வன்னி சென்றான். அம்மக்களோடு சிலநாட்கள் கழிந்தது. புலிகளின் சுற்றுலாவில் கண்ணைக் கவரும் கல்லறைகளும், வெளிநாட்டு வாகனங்களில் உலாவரும் புலிகளின் இடைநிலைத் தலைவர்களும், அவர்கள் வைத்திருந்த சுடு கருவிகளும் இவனையும் கவர்ந்தது. புலிகளின் உலகப்பொறுப்பாளர் காஸ்ரோவின் வார்த்தையாலங்களால் கவரப்பட்டவன். அவருக்களித்த வார்தைப் பிரகாரம் வெளிநாட்டிற்கு திரும்பி ஒரு வருடமே படித்து முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை முடித்துவிட்டு ( அந்த காலங்களில் வெளிநாட்டு புலி அமைப்போடு ஆழ்ந்த தொடர்புகள் இருந்தது) மீண்டும் வன்னி செல்கிறான். பெற்றோரால் அழுது குளறியும் தடுக்கமுடியவில்லை. ஆறு மாதங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் வன்னிக்கும் கொழும்பிற்கும் வெளிநாட்டிற்குமாக அலைந்து திரிந்த தாய்க்கு தகவல் கிடைக்கிறது. “அம்மா என்னை எப்படியும் புலிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்” பதறித்துடித்த தாய் மீண்டும் வன்னியை நோக்கி ஓடுகிறாள் ஆறுமாதங்களாக வன்னியில் இவளது மகன் மீட்புப் போர். அந்தக்காலத்தில் அவள் கண்ட வன்னியின் நிலமையை அவள் சொல்லக் கேட்டு அதை அப்படியே தருகின்றேன்.

விசா எடுத்துக்கொண்டு பஸ்சில போறன் எனக்கு பழக்கமே இல்லாத வன்னிநிலப்பரப்பு. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வீட்டில் இறக்கப்படுகின்றேன். விசாலமான வசதிகள் நிறைந்த வீடு. வீடுவசதியாக இருந்தாலும் சுற்று வட்டாரங்கள் பயங்கர அமைதியாகவும் மனிசற்ற முகத்தில ஒரு சிரிப்போ கலகலப்பையோ காணமுடியாது. ஒரு சில தம்பிமார் மோட்டசைக்கிளில வந்து சில கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டு பிறகுவாறம் எண்டு போவினம். பொழுது பட ஒரு பெடியனும் பெட்டையும் வந்தினம் ரெண்டுபேரும் கலியாணம் கட்டியிருக்கீனம். ரெண்டுபேரும் புலியின்ர காம்பிலதான் வேலை. எனக்கு கொண்டுவந்த சாப்பாட்ட தந்தினம். அந்த பிள்ளை சொல்லும் அன்ரி என்ன வேணுமெண்டாலும் கேளுங்க எண்டு. சாப்பாடு தண்ணிவென்னி பழவகை குளிர்பானம் ஒண்டுலையும் ஒரு குறையுமில்ல. என்ர பிள்ளைய நான் எப்பயம்மா பாக்கலாம்? பாக்கலாம் அன்ரி அது வேற பிரிவு எங்களுக்கு தெரியாது அவயள் வந்து சொல்லுவினம். இப்பிடியே நான் கேள்வி கேக்கிறதும் அந்தப்பிள்ள மறுமொழி சொல்லுறதாவும் இருக்கும். அதுகளின்ர முகத்தில ஒரு சந்தோசம் கிடையாது. ஏந்த நேரமும் ஓடுறதும் வந்து படுக்கிறதும் அப்பிடியே போகும்.தங்கச்சி நீங்க என்ன வேலை செய்யுறீங்கள் நான் கேப்பன் கொடுப்புக்கள்ள சிரிச்சுப்போட்டு போவாள். நான் அந்த வீட்ட விட்டு வெளிக்கிடும் வரைக்கும் இந்தக் கேள்விக்கு அதின்ர பதில் அந்த சிரிப்புத்தான். பகல் ரெண்டுபேரும் காம்புக்கு வேலைக்கு போனபிறகு வெளியில போயிற்று வருவமெண்டு நடந்தன் றோட்டில ஒன்றிரண்டு சனத்ததான் பாக்க கூடியதா இருந்துது. நான் பார்த்து சிரிச்சா அதுகள் ஒரு மாரிப்பாத்துக்கொண்டு போகுங்கள். அந்தப்பார்வையில ஒரு கோவம், ஒரு வெறுப்பு தெரியும். இதுகள் ஏன் இப்பிடி எண்டு நினைச்சுக்கொண்டு போவன். ஒரு அம்மன் கோயில் இருக்குது. அதில போயிருந்து அழுவன். அம்மனை ஆயிரம் நேத்திவைச்சு கும்பிட்டன் என்ர பிள்ள எனக்கு கிடைக்க வேணுமெண்டு. அங்க பல தாய்மார்கள் கதறி அழுது கொண்டிருப்பினம். சாப்பாடுகூட இல்லாம மணிக்கணக்கா அம்மனட்ட வாய்விட்டே முறையிடுவினம். எல்லாரும் தங்கட பிள்ளையள புலியள் கடத்திக்கொண்டு போனதால அழுகின்ற தாய்மார்கள்தான். இந்த கோயில் உறவில சிலபேர் என்னோட கதைக்க தொடங்கிச்சினம். அப்பதான் தெரியவந்துது நான் நிக்கிற இடம் வெளிநாட்டில புலியளுக்கு உதவி செய்யிற ஆக்கள் நிக்கிற இடமெண்டும். அதால அங்க நிக்கிற நானும் அப்பிடியான ஆளெண்டு புலி வெறுப்பால என்னையும் வெறுத்து பார்த்த பார்வைதான் அது எண்டு. அதுக்குப் பிறகு சில சனம் கதையள் சொல்லிச்சுதுகள். வீடு வீடா புலியள் சுத்திவளைச்சு பெடியள் பெட்டையள பிடிச்சுக்கொண்டு போவினம் அவசர அவசரமா சுடச்சொல்லிக் குடுத்துப்போட்டு முன்னுக்கு அனுப்பிப் போடுவினம். ரெண்டு மூண்டு கிழமைக்குள்ள பலபேருக்கு செய்தி வரும் வீர மரணமெண்டு. பாவியள் ஒளிச்சோடின பிள்ளையளயும் மாட்டன் மாட்டன் எண்டு சொன்ன பிள்ளையளையும் கொண்டுபோய் கொண்டு போட்டு வீரமரணம் எண்டுவாங்கள். அந்ததாய்மார் தான் அந்த அம்மன்கோயில் வாசல்ல கிடந்து சாப்பாடும் இல்லாம கதறுங்கள். அவங்கள மண்ணள்ளி திட்டுங்கள். அது கூட அவங்கட ஆக்களின்ர காதில விழுந்துதெண்டால் அடியும் உதையும்தான். கொஞ்ச நாள்ள நானே இதெல்லாத்தையும் என்ர கண்ணால கண்டன் என்ர ஈரல் குலையெல்லாம் அதை நினைச்சால் இப்பயும் நடுங்குது. நானும்; இங்க இருக்கிறபோது மற்றாக்களப்போல ஆரும் இப்பிடிக் கதை சொன்னா பொய்யெண்டுதான் நினைப்பன், ஆனா கண்ணால பாத்தப்பிறகு நினைக்கிறன் இவன்ர ஆட்சி ஆண்டவனே வரவே கூடாது வந்தா விடுதலை கேட்ட மக்கள் ஆபிரிக்க அடிமையவிட கேவலமாதான் வாழவேணும்.செஞ்சோலை பிள்ளையளுக்கு குண்டு போட்ட கொடுமைய நினைச்சா நெஞ்சு பதறுது. ( சுற்றுமுற்றும் பார்த்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தொடர்கின்றார்) அவங்கட முகாம்கள் எல்லாமே சனத்தோட தொடர்பு பட்டுத்தான் இருக்கும். அம்மன் கோயில் தேர்முட்டி ஓலையால மூடிக்கட்டியிருக்கும் அதுக்குப்பக்கத்தில இவங்கட கரும்புலி முகாம் அதிலயும் இந்த தேர்முட்டி மாரி கட்டியிருக்கும். பள்ளிக்கூடத்துக்கு அருகில பெட்டையளின்ர பெரிய காம்ப் இருக்கு. கோப்பிறட்டிக்கு ஒரு சுவரோட இன்.னொரு முகாம். இப்பிடி எல்லாமே மக்களோட சேத்துதான் இருக்கு. செஞ்சோலையிலயும் ஒவ்வொருநாளும் பிள்ளையளுக்கு பயிற்சிதான் நடக்கும். வெளி ஆக்கள கூட்டிக்கொண்டு வாறபோது இதெல்லாத்தையும் நிப்பாட்டிபோடுவினம். அண்டைக்கும் அந்த பயிற்சி நடக்கிறபோது வேவு விமானம் குறுக்கால போச்சுது கொஞ்சநேரத்தில ரெண்டு கிபீர் வந்து அடிச்சுது. நான் பதறிக்கொண்டு ஓடிப்போய் மரத்தின்ர மறைப்புக்கு கீழ இருந்த பங்கருக்குள்ள போனன் வேற பக்கத்தில இருந்த ரெண்டுபேரும் அதுக்குள்ள ஓடிவந்து இருந்தினம் ஒரு பசுமாடும் அதில வந்து நிண்டுது. உண்மையா என்ர உச்சம்தலையில விழுந்தமாரித்தான் இருந்துது. பிறகு கிபீர் போனபிறகு கொஞ்ச பேர்தான் ஒடிப்போச்சினம் நானும் போனன். அதுக்கிடையில சில வாகனங்கள்ள பெடியள் வந்து இறங்கினாங்கள். ஆக்கள கிட்டபோக விடயில்ல. கொஞ்ச பிள்ளையள் செத்துப்போச்சுதுகள் கொஞ்சம் காயங்களோட கிடந்ததுகள். அந்தப்பிள்ளையள தூக்கி காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்கயில்ல. பிளீட்பண்ணித்தான் அதுகளெல்லாம் செத்ததுகள். நான் என்னோட கதைக்கற சனத்தோட கதைச்சன் ஏன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால் காப்பாத்தலாம் தானே எண்டு. அவயள் என்ன பேசாமல் இருக்கச்சொல்லி சத்தம் போட்டினம். எனக்கு ஓரளவுக்கு இப்ப விளங்கீற்ருது. பிறகு புத்தகங்கள கொணந்து செத்த பிள்ளையளுக்கு பக்கத்தில போட்டுட்டு படமெல்லாம் எடுத்திச்சினம். அந்தக்கொடுமைய கண்ணால பாத்த பாவியா நான் இருக்கிறன். என்ர நெஞ்செல்லாம் படபடக்குது. ( நிறுத்திவிட்டார் நான் அதுபற்றி மேலும் சில கேள்விகள் கேட்கிறேன்) அது அரசாங்கம் சில ஆக்களட்ட ஏதோ ஒரு சாமான் குடுத்திருக்காம் ஒரு இடத்தில இருந்து அதை அமத்தினா ஆமிக்காரனுக்கு இடம் தெரியுமாம். இல்ல நான் காணயில்ல. ஆனா ஒரு கிழவன்தான் அத அமத்தி காட்டிக்குடுத்ததெண்டு அவற்ர மனிசிதான் சொல்லிக் குடுத்து மற்ரநாள் அந்தாள வந்து அடிச்சு இழுத்தெண்டு போனவங்களாம். இல்ல அத நான் காணயில்ல சொன்னவயள். ( இந்த சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு தூதுவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வீடியோ காட்டியதாக செய்திவந்தது அது என்ன வீடியோ என்பது மறைக்கப்பட்டது. இவர் சொன்னதில் இருந்து முதலில் வந்த விமானம் வீடியோ எடுத்த பின்தான் கிபீர் குண்டு போட்டுள்ளது. புலிகள் விளம்பரத்திற்காக அந்த பிள்ளைகளை இறக்கவிட்டு படமெடுத்து வியாபாரம் செய்துள்ளார்கள் என்பது கணிக்கப்படுகின்றது) அதால சனமெல்லாம் சரியான வெறுப்பும் ஆத்திரத்தோடயும்தான் இருக்குதுகள். புpடிச்செண்டு போற பிள்ளையளுக்கு சப்பாத்து கூட குடுக்கிறதில்ல வெறும் றபர் செருப்போட இல்லையெண்டால் வெறும் காலோடதான் சண்டைக்கு அனுப்புறவங்கள்.அங்க ஒரு ரீச்சர் இருக்கிறா அவாக்கு நாலு பிள்ளையள். மூத்தது பெடியன் ரெண்டாவதும் மூண்டாவதும் பெட்டையள் கடைசி பெடியன் எட்டுவயசு. எனக்கு நல்ல உதவி. ஒரு நாள் பெடியன வரச்சொல்லி சொல்லிவிட பெடியன் போக விருப்பமில்லாம ஒளிச்சு திரிஞ்சான் ரெண்டாம் நாள் இரவு சுத்திவளைச்சு வீட்டுக்க புலியள் பாஞ்சாங்கள் அப்பயும் அந்தப்பிள்ள ஒடி ஒளிச்சிட்டான் அவங்கள் பெட்டைய பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். அது சரியான கெட்டிக்காறப் பிள்ளை தான் படிச்சு டொக்டரா வருவன் அம்மா எண்டுசொல்லும். தமயன் பிறகு தான்போய் சறண்ட பண்ணிக்கொண்டு தங்கச்சிய எடுத்து விட்டவன். மூண்டு கிழமையில மன்னார் சண்டையில செத்துப்போனதா வந்து சொன்னாங்கள்.அந்த தாய் கதறின கதறல் இப்பயும் என்ர காதுக்குள்ள கேட்டுக்கொண்டே இருக்குது. அந்த கடசி குழந்தப்பிள்ளை தாயட்டக் கேக்கும் “அம்மா அக்காவ வந்து கொண்டுபோனாங்களெண்டா நானாம்மா போகவேணும்” எண்டு. எனக்கே அழுகவந்து நெஞ்செல்லாம் கனக்குது அந்த தாய்க்கு எப்பிடி இருக்குமெண்டு நினச்சுப்பாருங்க. ( சொல்லும்போது சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்துக்கொள்கிறார்).இப்படி பல விடயங்களை கூறினார் கடைசியாக மகனைப்பற்றி கூறும்போது இந்த நாட்டில் படித்த பிள்ளைகள் திருப்பி கதைக்குங்கள்தானே இப்படியான அனியாயங்கள் செய்வதற்கு இவன் ஒத்துக்கொள்ளவில்லை அதனால் பல முரண்பாடுகள் அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து போனகாரணத்தால் இவரை கொல்லுவதற்கோ அல்லது கடுமையாக தண்டிப்பதற்கோ சற்று தயங்கினார்கள் சிலவேளைகளில் வெளிநாட்டு அரசுகளுக்கு மறுமொழி சொல்ல வேண்டி ஏற்பட்டு விடும் என்று நினைத்திருக்கலாம். அதே நேரம் மகன் இவற்றைப் பார்த்த காரணத்தால் சாப்பிட மனமின்றி சைவம் மட்டுமே சாப்பிட ஆரம்பித்து விட்டார். ஏன்னுடைய தொடற்சியான அழுத்தமும் மகனின் போக்காலும் மகனை விடுவதாக கூறி கடைசியாக ஆறு மாத வன்னி வாழ்கையின் பின் தெய்வாதீனமாக உயிர்தப்பி நானும் எனது மகனும் இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோம். நான் வணங்கிய தெய்வங்கள்தான் என்னையும் என்ர மகனையும் காப்பாற்றி உள்ளது. அங்க பிரபாகரனின் இந்த கொடிய வதைகளில் இருந்து அந்த மக்கள் எப்படித்தான் வெளியேறப்போகின்றார்களோ தெரியாது. தமிழீழத்திற்காக உதவி செய்தவர்கள் நாங்கள் ஆனால் இப்போது நான் நினைப்பதெல்லாம் தமிழீழம் கிடைக்கவே கூடாது அதுவும் புலிகளின் அடக்குமுறையில் அதுஇருக்கவே கூடாது.(நீண்ட பெருமூச்சோடு கூறி முடித்தார்) அவர் பல விடங்கள் கூறியிருந்தார் அவற்றையெல்லாம் பார்க்கின்ற போது நாம் கற்காலத்துக்கு சென்றுவிட்டோமா என்று எண்ணத் தோன்றுகின்றது..ஆபிரிக்க அடிமைகளை விட கேவலமான அடிமைகளாக வன்னி மக்களின்; வாழ்வு இருக்கின்றது. இதிலிருந்து மக்கள் வெளியேற முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக