செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

போராடும் உலகத் தமிழர் இனி என்ன செய்ய வேண்டும்..........

போராடும் உலகத் தமிழர் இனி என்ன செய்ய வேண்டும்.......... வசிட்டர்.
வன்னியில் சிறுபகுதிக்குள் மாட்டுப்பட்டிருக்கும் மக்களின் நிலை சங்கடமான நிலையாக உள்ள இந்த வேளையில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் அங்கலாய்த்தக்கொண்டுள்ளார்கள். இளைஞர்கள் உண்ணாவிரதம் அறப்போராட்டம் என்று உண்மையான மக்கள் கரிசனையோடு செயற்படுகின்றனர் இதைப்பார்க்கின்ற போது ஆயுதப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தங்களை இணைத்தக்கொண்டு தலைவர்கள் கூறியவற்றை வேத வாக்காக எடுத்து செயற்பட்ட இளைஞர்களின் ஞாபகம்தான் ஏற்படுகின்றது. அவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் வாஞ்சையுடனுமே செயற்பட்டார்கள் ஆனால் சரியான சிந்தனையை பெற்றுக்கொள்ள தவறிவிட்டார்கள் தலைவர்களும் அவர்களை தங்கள் சுய நலத்திற்காக பாவித்தார்கள் முடிவு மக்கள் நேயத்தோடு மக்களுக்காக தங்கள் கல்வியை எதிர்கால வாழ்வை இழந்த அந்த இளைஞர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். எந்த சமூகத்திற்காக எல்லாவற்றையும் இழக்கத்தயாரானோர்களோ அதே சமூகம்தான் அந்த முத்திரையை குத்தி மகிழ்ந்தது. சமூகத்தில் வெறுப்போடு பார்கப்பட்டார்கள். அந்த நிலமை இன்று உலகெங்கும் போராட்டங்களை முன்னெடுக்கும் இளைஞர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. நல்ல தலைமை இல்லாமல் சுயநலத்திற்காக அவர்களை பயன்படுத்ப்பார்க்கும் தலைவர்களின் தவறான வழிநடத்தல் அந்த நல்ல இதயம் கொண்டவர்களுக்கு தாய்நாட்டு மக்களுக்கான போராட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்திவி;டவிடக்கூடாது என்பது என் முதற் கவலையாகும்.
இவர்கள் போராட்டத்தின்போது முன்வைக்கும் கோசம் “யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு உலக நாடே இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் என்பதே”. வன்னியில் அடைபட்டுக்கிடந்து உயிரிழக்கும் அப்பாவிப் பொதுமக்களை இதன்மூலம் காப்பாற்றலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு உள்ளது அதனால்தான் இந்த போராட்டங்களில் குதித்துள்ளார்கள். ஆனால் இதையே வெளிநாட்டில் தலைமை கொடுப்போர் எந்த விதமான அரசியல் அறிவோ அல்லது போராட்ட இயக்கங்களில் சேர்ந்திருந்து அதனால் கிடைத்த அனுபவமோ இல்லாத வெறும் புகழுக்காக அல்லது சிங்களவனுக்கு அடிபோட்டால் ஈழம் கிடைத்துவிடும் என்று உண்மையாகவே நம்பிக்கொண்டிருக்கும் உயர்ந்த சிந்தனை அறிவு அற்றவர்களால் புலிகளால் வைக்கப்படும் ஏமாற்றுக்கோசங்கள் எடுத்துச் செல்ப்பட்டு திணிக்கப்படுகின்றது.புலிகளால் கொடுக்கப்பட்ட சிந்தனைதான் நிரந்தர யுத்தநிறுத்தம். நிரந்தர யுத்தநிறுத்தம் ஏன்? அழிவின் விழிம்பில் இருக்கும் புலிகள் தப்பிப் பிழைக்கவேண்டும் பின் வழமைபோல் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு மீண்டும் ஒரு சில தாக்குதல்கள், அதனால் பெறப்படும் வெளிநாட்டு பணம் அதை வைத்துக்கொண்டு மக்களை ஆளுதல் (அடக்கி)..இப்படிக்கேட்பதன்மூலம் போராட்டம் செய்வோர் தாங்கள் கேட்பதை வெளிநாடுகள் செய்யுமா என்பதை சிந்தித்து பார்த்தால் இல்லை என்பதுதான் விடையாகும். காரணம் உலகநாடுகள் எல்லாமே புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளது. நாம் விரும்பாவிட்டாலும் உண்மையும் அதுதான். ஆகவே இந்த வேண்டுகோளை எந்த நாடுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவே உண்மையில் மூன்று லட்சம் மக்களை காப்பாற்றும் எண்ணம் இருந்தால். முன்வைக்கப்பட வேண்டிய கோசம் உலக நாடுகளே எம்மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகின்றீர்கள் என்ற கேள்வி மட்டுமே. மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகள் நிட்சயமாக சிந்திக்கும். மக்களை பாதுகாப்பதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும். ஆயுத தாரிகள் விலகுங்கள் மக்கள் தங்கள் விருப்பப்படி விரும்பியதை செய்யட்டும் என்று கேட்கின்ற நிலை வரும். அப்படியான நிலைமை ஏற்பட்டால் மக்கள் எவரின் அழுத்தமும் இல்லாமல் தாங்கள் விரும்பியதை செய்வார்கள். புலிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையையோ, அரசிடமிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையையோ யாரும் சிரமப்பட்டு எடுக்கவேண்டிய தேவை கிடையாது. மக்கள் தாங்களே எடுப்பார்கள் அவர்கள் வாய்களும் கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டால் போதும். மக்களுக்காக குரல் கொடுப்போர் செய்வார்களா.சிலர் கேட்கின்றார்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தலைமை வேண்டும்தானே என்று. இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு தலமை தாங்கியவர்கள் தொடர்ந்து செய்தது என்ன? இனத்துவேசம், இனவெறி, நாட்டுமக்களை தொடரந்;து தமக்கு வாக்களிக்க பண்ணி சொகுசு வாழ்க்கை, உண்ணாவிரதம், பகிஸ்கரிப்பு, கடையடைப்பு, பல்கலைக்கழக பகிஸ்கரிப்பு, ஆனால் தலைவர்களின் பிள்ளைகள் எல்லாவற்றையும் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்டு மீண்டும் தலமை தாங்குவதற்கு நாடடுக்கு வருதல் அடிமைகொள்ளல்., கடைசியாக நாலில் மூன்று பங்கு தமிழர்களை நாட்டில் இருந்து புலம்பெயரச்செய்த பெருமை, இதற்கொரு தலமை தேவைதானா. மக்கள் இப்போது நன்றாகவே நாட்டைப் படித்துவிட்டார்கள் அவர்களை அங்கே சுதந்திரமாக விடுங்கள் அது மட்டும் தான் தேவையானது. இன்னும் சிலர் கேட்கிறார்கள் அப்படி மக்கள் வெளியேறிவிட்டால் புலிகள் முற்று முழுதாக அழிந்துவிடுவார்கள். பின் மீண்டும் கட்டியெழுப்புவது என்பது இலகுவானதா என்று. இலகுவானது அல்ல ஒரு சரியான மக்கள் விடுதலைக்கான அமைப்பு உருவாவது என்பது இலகுவானதல்ல. ஆனால் ஈழ விடுதலை அமைப்பு பயங்கரவாத செயல்களை செய்ததன் மூலம் விடுதலை அமைப்பு என்ற பெயரை இழந்து உலகெங்கும் பயங்கரவாத அமைப்பென்ற பெயரோடு நிற்பது தேனைக்குரிய உண்மை. இதன் காரணம் அரசியல் அறிவில்லாத வெறும் ஆயதத்தை நம்பிய தலைமை என்பதால்தான் என்பதை ஒருவரும் மறுக்க மாட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் அரசியல் அறிவுள்ள சில தலைவர்களால் மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருந்த சுய நல அரசியல் வாதிகளான கூட்டணியினரை அப்புறப்படுத்தி மக்களை விழ்ப்படைய செய்தது. ஆனால் இன்று அதே சுய நல அரசியல் வாதிகளை தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரோடு தலைவர்கள் ஆக்கி பாராழுமன்றம் அனுப்பிய அரசியல் அறிவற்ற தலைமை தான் என்பது துர்அதிஸ்ட வசமானது. (பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள் ). இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது தமிழ் கூட்டமைப்பினர் சிலர் புலித்தலைமைக்கு எதிராக பல்டி அடிக்க தொடங்கியுள்ள செய்திகள் வருகின்றது. உண்மையில் இது நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப் படவேண்டும்.ஆக மக்களை காப்பாற்றும் நோக்குள்ளவர்களே உங்களுடைய உண்மையான போராட்டத்தில் அரசியல் அறிவற்ர சுயநலமிகளின் தலையீட்டை அனுமதிக்காமல் சிந்தித்து செயல்ப் படுங்கள் இல்லையேல் நாளை நீங்கள் துரோகிகள் என்று தூற்றப்படுவீர்கள். சிந்தித்து செய்படும்போது தூற்றப்பட்டால் பெருமைப்படலாம். ஏனென்றால் வெளிநாட்டில் வாழும் அரசியல் அறிவற்ற தலைவர்களுக்கு இன்றைய துரோகிகள் நாளைய தியாகிகள். (வரலாற்றில் பலர் எம் கண்முன் இருக்கின்றார்கள்). இவர்கள் பட்டம் எவரையும் எதுவும் செய்துவிடாது. நியாயத்துக்கும் மனிதாபிமானத்திற்கும் கட்டுப் படுவோம்.மீண்டும் அடுத்த கட்டுரையோடு வருகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக