வியாழன், 19 மார்ச், 2009

மன்னார் வைத்திய சாலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர் :

மன்னார் வைத்திய சாலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர் :
மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் இருவர் காணாமல் போயிருப்பதால் வைத்தியசாலையின் பாதுகாப்புக்கள் மேலும் பலப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. மன்னார் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டுமாத ஆண் குழந்தையும் நேற்று இரவு (18.03.2009) முதல் காணாமல் போயிருக்கின்றனர். வன்னிப்பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலமாக திருகோணமலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு பின் அங்கிருந்து இம்மாதம் 16ஆம் திகதி மன்னார் வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர்களில் நகுலேஸ்வரன் கிருசாந்தினி மற்றும் நகுலேஸ்வரன் சஞ்ஜீவன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார்கள். மேற்படி இருவர் காணாமல் போயிருக்கும் நிலையில் இன்று இராணுவ உயர் அதிகாரிகள் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையின் சுற்றுப்புற மதில்கள் முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டு வருவதாகவும் தெரிகின்றது. இது இவ்வாறிருக்க கடந்த மாத இறுதிப்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலை விடுதியில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் காவற்துறையினரினால் வைத்தியசாலைச் சூழலில் பாதுகாப்புக்கள் கருதி விசேட நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக