புதன், 11 மார்ச், 2009

கப்பல் திரும்பியது ஏன்? புதிய தகவல் செய்தியை தொடர்ந்து உள்ளது.

உணவுக்கப்பல் தாக்குதலுக்குள்ளாகவில்லை ‐ திருகோணமலையை நோக்கி சென்றுள்ளது – முல்லை அரச அதிபர் :

நான் இந்த கடல் பகுதியில் தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான் காணவில்லை. அந்த உணவுக் கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம் என்று புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்பரப்புக்கு வந்த உணவுக் கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை குறித்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
500 மெற்றிக் தொன் உணவுடன் வந்த கப்பல் அதிலிருந்து 140 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இறக்கிவிட்டு மீதி உணவுப் பொருட்களை இறக்குவதற்கு மேலும் இரண்டு நாட்கள் தேவைப்பட்ட நிலையில் கடும் காற்றுஇ மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உணவுப் பொருட்களை இறக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக தாங்கள் அறிவதாகவும் அங்கிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் அப்படித்தான் கூறினர் என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல் அங்கு வருகின்ற உணவுப் பொருட்களை தாங்கள்தான் பொதுமக்களுக்குப் பிரித்து வழங்குவதாகவும் வழங்குகின்ற பொறுப்பையும் தாங்களே ஏற்றுக் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலே உள்ள செய்திபற்றி அங்குள்ள சிலருடன் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கப்பல் தரித்து நின்ற இடத்திற்கு அண்மையாக சண்டை நடைபெற்றதும் குண்டுகள் விழுவதும் உண்மையெனவும். ஆனால் கப்பலை நோக்கி குண்டு வீசப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதேநேரம் கடல் கொந்தளிப்பாக இருந்ததும், பொருட்களை இறக்குவதில் சிரமம் இருந்ததும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. அப்படியாக இருந்தால் ஏன் அரசாங்கம் பொய்யான காரணம் கூறியது என்பது கேள்வியாக உள்ளது. இப்படியான பிரச்சாரம் அரசாங்கத்தின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கைக்கு குந்தகமானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக